கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வியாழன், 26 செப்டம்பர், 2013

ஜோதிட நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம்

நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் " பத்ததி " எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.

நாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.

பல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்களை கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.

நாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.
1. சப்த ரிஷி நாடி
2. சந்திரகலா நாடி
3. மீனா நாடி
4. பிருகு நாடி
5. சிவ நாடி
6. நந்தி நாடி
7. கால சக்கர நாடி
8. கணேச நாடி
9. சூரிய நாடி
10. சந்திர நாடி
11. அங்கார நாடி
12. புதன் நாடி
13. குரு நாடி
14. சுக்கிர நாடி
15. சனி நாடி.

மேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.

சப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜோதிட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.

நாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா? என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.

நமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே