கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

வியாழன், 31 மார்ச், 2011

பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி







ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.

ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத் தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.



விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.

அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.

ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.





ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று.

பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.

கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டார்.




இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.

அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.


அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.

“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.

பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.

சிவக் கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.

கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.

“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”

இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயி லின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானி டம் சென்றார்.

நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானி டம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ள தால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார். சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.

“லோக நாயகா! விடையேறும் பெரு மானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”

சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார்.


தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!

அருகே அடியார்க்கு அடியானாய் நின்று கொண்டிருந்த அன்புத் தொண்டன் சுந்தரரைத் திருநோக்கம் செய்தார்.

“சுந்தரா! அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!” என்று திருவாய் மலர்ந்தார் விரிசடைப் பெருமான்!




ஐயனின் ஆணையைச் சிரமேற் கொண்ட ஆலாலசுந்தரர் நொடிப் பொழுதில் நஞ்சினைக் கொண்டு வந்தார். அவ்விஷத்தைத் திருக் கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினர்.

விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கி யவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலத் தையே அழித்து விடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப் பித்தனர்.

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.

எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.

“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித் தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி, தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.

மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.

எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார். விஷத்தைக் கொண்டு வந்த சுந்தரர் ஆலால சுந்தரர் என்னும் நாமத்தையும் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.

இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.

பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!

இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!




நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.

இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.

எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.





பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.

1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.

சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.

கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.






கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.

பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.

இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.

இத்தகைய மகிமை மிக்க பிரதோஷ விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து, சர்வேச்வரனுடைய அருளைப் பெற்று, சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்