கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 13 மார்ச், 2011

திருமால் அவதாரங்களில் வாமனாவதாரம்



திருமகளோடு காட்சி தரும் விஷ்ணு பகவானை, 'திருமால்' என்கிறோம். 'மால்' என்றாலே திருமாலைத்தான் குறிக்கிறது. 'திரு' என்பது லட்சுமியைக் குறிப்பிடுகின்றது.

அவதார நிகழ்வுகளில் சீதா ராமனாகவும், ருக்மணி கண்ணனாகவும், லட்சுமி நரசிம்மராகவும் திருமால் காட்சியளித்துள்ளார். திருமகளுடன் இணைந்தே திருமாலின் சில அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது.

தீமையின் வடிவாக விளங்கிய இரணியகசிபுவை ஒடுக்குவதற்காக நரசிம்மாவதாரத்தை விஷ்ணு பகவான் நிகழ்த்தினார். தூணிலிருந்து வெளிவந்த நரசிம்மம், இரணியகசிபுவின் உடலைக் கிழித்து அவனை வதம் செய்தது. வதம் முடிந்த பின்பும் அவதாரத்தின் மூலம் ஏற்பட்ட உக்கிரம் தணியவில்லை. நரசிம்மத்தின் உக்கிர தாண்டவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய பிரம்மா முதலிய தேவர்கள், மஹாலட்சுமியிடம் சென்று பெருமானின் உக்கிரத்தைத் தணிக்கும்படி பிரார்த்தனை செய்தனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற தேவி, உக்கிர நரசிங்கத்திடம் சென்று சாந்தப்படுத்தியதும் அவரது சீற்றம் தணிந்தது. 'தந்தையை அடைய தாயின் தயவை முதலில் நாட வேண்டும்' என்ற ஸ்ரீவைஷ்ணவக் கொள்கையை இது உணர்த்துகிறது.

உலக நன்மை கருதி, மஹாலட்சுமியைப் பிரிந்த நிலையில் வாமனாவதாரம் நிகழ்கிறது. மகாபலி என்ற அசுர சக்ரவர்த்தி விண்ணையும், மண்ணையும் அபகரித்து, அவற்றைத் தன் உடைமையாகக் கருதினான். அவன் சிறந்த பக்தன் என்பதால் அவன் செருக்கை அடக்கி அவனைக் காப்பாற்ற திருமால் திருவுள்ளம் கொண்டார்.

ஒரு சமயம் மகாபலி தான் செய்த வேள்வி நிறைவடைந்த போது அந்தணர்களுக்குத் தானம் வழங்க விரும்பினான். அப்போது திருமாலே அந்தணர் வடிவில் வந்து மூன்றடி நிலம் வேண்டினார். மகாபலி அதற்கிசைந்தான். வாமனன் பேருருக் கொண்டு ஒரு காலை விண்ணிலும், மற்றொரு காலை மண்ணுலகிலும் வைத்து மூன்றாவது அடிக்கு மகாபலியிடம் நிலம் கேட்க, அவன் தன் தலை தாழ்ந்து அவ்வடியை ஏற்றான். அவனது தலையில் கால் வைத்து திருமால், மகாபலியைப் பாதாள உலகில் தள்ளி, அவன் செருக்கை அடக்கினார். மகாபலிக்கு 'உலகப் பொருள்களெல்லாம் இறைவனுக்கே சொந்தம்' என்ற ஞானம் பிறந்தது.

வாமனாவதாரம் முடிந்து திருமால் திருப்பாற்கடலுக்குச் சென்றபோது உலகெங்கும் அளந்து களைத்த திருமாலின் திருவடிகளைப் பிடித்துவிடுகிறாள் திருமகள். வாமனாவதாரத்தில் திருமாலுடன் செல்லாத குறை தீர்வதற்காகவே ராமாவதாரத்தில் திருமகள், சீதாபிராட்டியாக வனவாசத்தில் காட்டில் நடந்து அதைச் சமன் செய்தாள்.

ராமாவதாரத்தில் ஸ்ரீராமனின் தேவியான சீதை மேல் மையல் கொண்டு ராவணன் அவளை சூதான வழியில் கவர்ந்து செல்கின்றான். ஆனால் சீதையை ராமனிடமிருந்து பிரித்த தீய செயலின் விளைவாக ராவணன் தன் செல்வங்களை இழந்து, உயிரையும் இழக்கிறான். உயிர் இழந்த பின்னும் மாற்றான் மனைவியை இச்சித்த பழியை அவன் சுமக்க நேர்ந்தது. ராவண வதத்திற்கு சீதா தேவியின் தியாகமும் துணை நின்றது.

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அதைத் தடுக்க முயன்றார், ஜடாயு என்னும் கழுகரசர். அவரை ராவணன் கடுமையாகத் தாக்கி, சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். உயிர் பிரியும் தறுவாயிலிருந்த ஜடாயுவைக் கண்ட ராமபிரான் மனம் வருந்தினார். டாயு அவரிடம் சீதாராமனாகக் காட்சி கொடுத்தருளும்படி வேண்டினார். ஆனால் அப்போது சீதா தேவி அவரோடு இல்லாத காரணத்தினால் லட்சுமி நாராயணராக ஜடாயுவுக்குக் காட்சி கொடுத்தார் ராமபிரான்.

கிருஷ்ணாவதாரத்தில் பகவான், ருக்மணி கண்ணனாகவே குறிப்பிடப்படுகிறார். ஒரு சமயம், நாரதர் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரின் கர்வத்தை அடக்குவதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார் கண்ணன்.

தான் அழைப்பதாகக் கூறி அனுமனை அழைத்து வரும்படி நாரதரை அனுப்பினார் கண்ண பரமாத்மா. அதன்படி நாரதர் சென்று அழைத்தபோது அனுமன் 'கிருஷ்ணன் யார்?' என்று கேட்டு, வர மறுத்துவிடுகிறார். அதனால் கோபமடைந்த பலராமன், அனுமனை அழைத்துவரச் சென்றார். அப்போதும், அனுமன் அவரையும் அவமதித்து அனுப்பிவிடுகிறார். மூன்றாவது முறை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அழைப்பதாகக் கூறி அனுமனை அழைத்து வரும்படி கிருஷ்ணர் கூறியதும், அவர்கள் சென்றபோது அனுமன் பணிவுடன் அவர்களோடு வந்தார். அப்போது அனுமனுக்கு ஸ்ரீராமனாகவே காட்சி கொடுக்க வேண்டுமே என்பதற்காகவும், ராமாவதாரத்தில் அனுமனுக்கு பின்னொரு சமயம் சீதா ராமனாகக் காட்சி கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவும் அனுமனுக்கு சீதா ராமனாகக் காட்சி கொடுத்தார் கண்ணன். சீதையாக உடனிருக்க, சத்யபாமாவைத் தவிர்த்துவிட்டு ருக்மணியையே ஏற்றுக் கொள்கிறார். ருக்மணி தேவியை சீதையாக ஏற்றுக் கொள்வதன் மூலம் சத்யபாமாவின் கர்வத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் ஒடுக்குகிறார். இவ்வாறு தர்மத்தை நிலை நாட்ட இறைவன் எடுத்த அவதாரங்களில் தேவியின் திருவருளும் இணைந்தே செயல்பட்டிருப்பதைப் பல கதைகளின் மூலம் அறியலாம்.