![]() |

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்காகும். இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன.
ரிக் வேதம்
ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன. இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8x8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும். க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் - இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.
யஜுர் வேதம்
இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது. இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும். கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.
சுக்ல யஜுர் வேதம்
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன. 1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன, இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன. இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.
சாமவேதம்
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர். பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன. தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம், கோபதம் ஆக ஏழாகும். உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு. இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை. இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.
அதர்வண வேதம்
அதர்வண வேத மொழிகளுக்கு மந்திரங்கள் என்பது பெயர். இவ்வேதத்துள் 5847 மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை 733 வர்க்கங்களாகவும் 111 அனுவாகங்களாகவும் 34 ப்ரபாடங்களாகவும் 20 காண்டங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வேதத்திற்கு சாகைகள் பிப்ப லாதம், தனதம், இளதம், சளநகீயம், ஜாஜலம், ஜலதம், பிரமவதம், தேவதர்சனம், சாரனைவத்யம் எனும் ஒன்பதாகும். இவற்றில் பிப்லாதமும் சௌனகமும் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த வேதத்திற்குரிய பிரமாணங்கள் கல்பசூத்ரங்கள் அரண்யங்கள் ஏதும் இல்லை. உபநிஷதங்கள் முண்டகம், பிரச்சினம், மாண்டூக்யம் என்ற மூன்றாகும். வேதம் பயில்வதை விளக்கிக் கூறும் அங்கநூல்கள் ஆறாகும். சீட்சை, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருத்தம் கல்பம், கல்பசூத்ரம் என்பவையே அவை. சீஷை: சிட்ஷை என்பது வேத மந்திரங்களில் உள்ள மந்திரச் சொற்களை உச்சா¢க்கும் முறைகளை விளக்குவதாகும். இதில் எழுத்து, ஸ்வரம், மாத்திராகாலம் முதலியன விளக்கப்பட்டுள்ளன. பாணிணி இதற்கு விளக்க நூல்களை செய்துள்ளார்.
வியாகரணம் என்பது வேதத்தின் இலக்கணத்தை விவாரிப்பதாகும். பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் முதலியோர் வியாகரண விளக்க நூல்கள் செய்துள்ளனர்.
சந்தஸ்என்பது வேதத்தை இசைக்கும் முறையில் எழுத்துக்களின் எண்ணிக்கையை விளக்குவதாகும். வேதத்தில் காயத்ரி, உஷ்ணிக், ஸ்னுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ருஷ்டுப், ஜகதீ எனும் ஏழு சந்தஸ்கள் உள்ளன. இவை வேதத்தினை எப்படி ஏற்றி இறக்கி ஓத வேண்டும் என்பதையும் வேதத்தின் ஒவ்வொரு அடியிலும் வர வேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் வரையறுப்பதாகும். பிங்கல முனிவர் இதற்கு நூல் எழுதியுள்ளார்.
ஜோதிஷம் என்பது வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தை விளக்குவதாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்திகளையும் தானங்களையும் முறைப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டும். அதற்குக் காலத்தைப்பற்றிய அறிவு அவஸ்யமாகிறது. காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட நூல் துணை செய்கிறது. ஆதித்தன் பாஸ்கர பட்டர் இதற்கு நூல் செய்துள்ளார்.
நிருத்தம்: இது வேத மொழிகளுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் விளக்கம் கூறும் அகராதி போன்றதாகும். இதன் மூலம் வேத வாக்யங்களின் உண்மைப் பொருளை அறிய முடிகிறது. இதற்குப் பாஸ்கரராயர் உரை உள்ளது.
கல்பம் என்பது வேதங்கள் கூறும் மந்திரங்களின் அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்திக் கூறுவதாகும். இவை ஸ்ரௌதம், கிருஹ்யம், தர்மம் என மூன்று வகைப்படும்.
மீமாம்சை என்பது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டு வகையாக உள்ளது. பூர்வ மீமாம்சை ஜை மினியால் செய்யப்படுவதாகும். 12 கண்டங்களுடன் 60 அத்தியாயங்களும் பல சூத்திரங்களையும் கொண்டது.
வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு அல்லது வேத சாரத்தைக் குறிப்பதாகும். 191 விஷயங்களைப் பற்றி 558 சூத்திரங்களால் இந்நூல் ஆக்கப்பட்டது. இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்டவை. இதனை ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பர். இது வேத வியாசர் இயற்றியது.
நியாயம் என்பது ஒன்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை நிறுவும் நூலாகும். இதனை இயற்றியவர் கௌதமர் ஆவர். 537 சூத்ரங்களைக் கொண்டது. ஒரு பொருள், செயல் நிஜமா என்பதை ப்ரமாணம், ப்ரமேயம், சம்சயம், ப்ரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், வாதம் முதலியவற்றால் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று கூறுகிறது.
வைசேஷிகம்: வையத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பிரித்து அதன் குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவிக்கும் நூலாகும். கணாத முனியால் அருளப்பட்ட இந்நூல் 373 சூத்ரங்களைக் கொண்டது. த்ரிவ்யம் குணம் கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் முதலிய ஆறு வகையாக உணர்த்துவதாகும்.
வேதபடனம்: வேதத்தைப் பல்வேறு வகையில் ஓதுவதே வேதபடனம் எனப்படும். அவை மூலசமிதை, பதசமிதை, கிரமம், ஜடை, கனம் என்பனவாகும். மூலசமிதை என்பது வேத மந்திரங்களைச் சந்தி சேர்த்துச் சொல்வது. பதசமிதை என்பது பதம் பதமாகப் பிரித்துச் சொல்வதாகும். கிரமம் என்பது ஒரு பதத்தை இன்னொரு பதத்திற்கு முன்னும் பின்னும் சேர்த்துச் சொல்வதாகும். ஜடசம்ஹிதை பதங்களைச் சேர்த்துப் பிரித்துச் சொல்வதாகும் (ஜடை பின்னுவது போல்). வேதம் பயிலும் மாணவர்கள் நிலையாகத் தங்கிப் பயின்ற இடங்கள் கடிகை எனப்பட்டன. காஞ்சீபுரம், சோழங்கிபுரம் முதலிய ஊர்களில் கடிகைகள் இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.