கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இறப்பின்பின் நடப்பது என்ன?


ஆர்தரின் பூவுலக வாழ்க்கையின் கடைசிச் சில மாதங்களின் போது அவர் மறுபடியும் புத்தகம் ஒன்று எழுதத்தலைப்பட்டிருந்தார் என்பதை நான் அறிவேன். ஆனால் அது எதைப்பற்றியென்று எனக்குத் தெரியாது. அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களிருக்கையில் அவருக்கும் எனக்கும் தெரிந்த ஒரு நண்பர் வில்லியம். வி. ராஸ்சர் அடிகளார் (Reverend William v. Rauscher) மூலமாக ஆர்தர் தனது புத்தகத்தின் தலைப்பைத் தெரிவு செய்து விட்டார் என அறிந்து கொண்டேன். அந்தத் தலைப்பு என்னவென்றால் 'இறப்பின் பின் நடப்பது என்ன' என்பதாகும். அவரின் ஈமச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே (காலை வேளைகளில்) என்னுடைய தட்டச்சு இயந்திரத்தைப் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் ஆட்கொள்கையில் இறப்பு என்கிற வாயிலின் மறுபக்க வாழ்வு எப்படியிருக்குமென்று விபரித்து நானும் அவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதப்படவேண்டும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதாவது ஆர்தர் போர்ட் எனும் ஆத்மா ஒரு தீர்மானம் எடுத்தால் அதை நிறைவேற்றியே தீருமென்று காட்டிவிட்டார்.
புத்தகம் எழுதத்தொடங்கியதுமே அவர் பலவிதமான ஆத்மாக்களின் குணநலன்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார். பெப்பிரவரி பதினான்காம் திகதியன்று அவர் பின்வருமாறு எழுதினார். "இன்று ஒருவர் உயிருடனிருக்கையில் இறப்பின் பின் என்ன நடக்குமென்பதைப் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவரும் ஆனால் அதில் நம்பிக்கையோ, நம்பிக்கயின்மையோ கொள்ளாத ஒரு பக்கமும் சாராத, உலகவாழ்க்கையின் இயந்திரத்தன்மையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இதைப்பற்றி எண்ணுவதற்குக்கூட நேரமில்லாத ஒருவர் இங்கே வரும்போது எப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பார்ப்பார் என்பதைப் பார்ப்போம். அவர் விட்டுவிட்டு வந்த இடத்தைப் போலவே சிறிது வித்தியாசமான ஒரு இடத்தில் தானிருப்பதாகக் காணுவார். ஒன்றும் பெரிய வித்தியாசமிருக்காது. எல்லாம் தெளிவாகக் கூடுதல் பிரகாசமாக இருக்கும். அத்துடன் ஆகாயமானது மேகங்களில்லாமல் இருக்கும். மறுபடி ஒன்றும் மாற்றமில்லாததால் அவர் அதேயிடத்தில் தான் இன்னும் உயிருடனிருப்பதாகத் தான் எண்ணுவார். எனவே அவர் தனது அன்றாட அலுவல்களைப் பார்க்க நினைத்துத் தனது முதலாவது அப்போயின்மென்ட்டுக்குப் போவார். அங்கே சனக்கூட்டமாகவிருந்தாலும் ஏன் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையென்று யோசிப்பார். தான் அவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்திருப்பேனோவென மூளையைக் குடைந்து பார்ப்பார். அப்படியொன்றும் தோன்றாமல் விழிப்பார். ஒரு சிலர் இவரின் நண்பர்களாகவே இருப்பார்கள். அவர்களுடன் ஒரு மனஸ்தாபமும் இவருக்கிருந்திருக்காது.
"அவர் பெரிய குழப்பத்துக்காளாவார். பின் இங்கேயிருக்கும் அவரைப் பூவுலகில் நன்கு தெரிந்த ஒருவர் அவருக்கு விடயத்தை விளக்கி ஆறுதலளிக்க வருவார். ஆனால் அவரோ இதென்ன இறந்தவரின் ஆவி தன்முன்னே திடீரென்று தோன்றுகிறது என எண்ணி அஞ்சுவார். வந்தவர், தானும் அவரும் இருவருமே இப்போ ஆவியுலகிலிருப்பதாக விளங்கப்படுத்த அவரோ தான் ஒரு கூடாத கனவு காண்பதாக எண்ணுவார். அவர் தனது வீட்டுக்குத் தனது மனைவியைக் காணச்செல்வார். ஆனால் மனைவியோ சர்ச்சில் கறுப்பு உடை உடுத்திக்கொண்டு உட்காந்திருப்பதைக் காண்பார். அவர் தனது நண்பர்களில் யாரோ இறந்து விட்டார்கள் அது யாராக இருக்கும் (அது தானாக இருக்கக்கூடுமென சற்றும் சந்தேகப்படாமல்) வியப்பார். பின் அவர் முன்னே சென்று யாரென்று அறிவதற்குப் பிரேதப்பெட்டிக்குள் குனிந்து பார்ப்பார். அப்போது தான் முதல் தடவையாகத் தனது உடல் அங்கேயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவார். இப்படியிருக்காது, இப்படியிருக்காது எனத்தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், அவருடன் கூட வேலை செய்பவர்கள் அனைவரும் அவரது மரணத்தைப்பற்றித் (தான் அவர்களுக்கு அருகே நின்று தொண்டைத்தண்ணீர் வற்றக் கத்திக் கொண்டிருக்கும் போது) கவலைப்பட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போ அவரது நிலை உனக்கு விளங்குமென நினைக்கிறேன். சிறிது சிறிதாக அவருக்குத் தான் தான் சிக்கலில் மாட்டி விட்டது புரியத்தொடங்கும். தான் கதைப்பதை அவர்களுக்கு விளங்கப்பண்ணாவிட்டால் தன்னை உயிருடன் புதைத்து விடுவார்களென்று அஞ்சுவார். தான் கதைப்பது அவருக்குத் (தனக்குத்) தெளிவாகக் கேட்கும். ஆவியுலகிலிருக்கும் அவரது உறவினர் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள இயலாமல் தான் உயிருடன் புதைக்கப்படப்போகிறேனோ என வருந்துவார்.
"இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்ட ஒரு காட்சி. இதைப்போல சிலர் ரொம்பக் கஷ்டப்படுவார்கள். இறந்தபின் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றிச் சற்றும் சிந்திக்காமல் இருப்பவர்கள் கிட்டத்தட்ட இந்த நிலையில் தான் வருவார்கள். மூக்கைப்பிடித்தால் வாயைத் திறக்கத் திரியாதவர்கள் போல்தான் இவரின் நிலை. அவருக்கு உண்மையை விளங்கப்படுத்த நீ...................ண்ட நாட்கள் எடுக்கும். (அதாவது அவர் நிரந்தரமானவர்; ஆத்மா வடிவில் உயிர் வாழ்வார்; பூதவுடல் மட்டும் தான் அழிந்தது என்பதை விளக்குவதற்கு). அவரது விதவை மனைவியின் துயரத்திலும் பார்க்க அவரின் துயரம் மிகக்கூடுதலாக இருக்கும். அவரது மனைவி அவரை ஒரு நாள் சந்திப்போமென ஆறுதல்படுவாள். ஆனால் அவரோ நடந்தது நிஜமல்ல என நினைப்பார்.
மறுநாள் போர்ட் பின்வரும் விதமாகத் தொடங்கினார், "இப்போ வேறொரு விதமான மனிதரைப் பார்ப்போம். அவர் சொர்க்கபுரியில் நம்பிக்கை வைத்தவர். தேவகுமாரர்களும் தேவதைகளும் யாழ்வாசித்துக் கொண்டிருக்கும் பளிங்காலான மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் கூடிய சொர்க்கபுரியில் ஒரு உயரமான சிம்மாசனத்தில் ஆண்டவன் அமர்ந்து இரவுபகலாக மகிழ்ச்சியான ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பவை போன்ற கற்பனையிலுள்ளவர். இப்படியான மனநிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த சர்ச்சை அண்டிவாழும் குறுகிய மனப்பான்மை கொண்ட பலர் உள்ளனர். ஆனால் உண்மை அப்படியல்ல. இங்கே வரும் ஆத்மாக்கள் பளிங்காலான மாடமாளிகைகளை விரும்பின் அவர் அப்படிப்பட்ட இடத்திலிருப்பார். ஏனெனில் அப்படிப்பட்ட கட்டடங்கள் பூவுலகில் இருக்கின்றன. அத்துடன் ஆத்மாக்களுக்குத் தாங்கள் நினைக்கும் இடத்தில் நிற்கக்கூடிய சக்தி வந்துவிடும். ஆனால் தேவதைகளையும் தேவகுமாரர்களையும் சிறகுகளுடன் தோற்றுவிப்பது கஷ்டம். அப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நான் இப்போ இருக்கும் இடத்தில் காணவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் இங்கே பல ஆத்மாக்கள் ஒளி வடிவங்களாக உள்ளன. நல்ல ஆத்மாக்கள் ஒளி ரூபமாக இருக்கின்றன. ஆனால் நாம் சிறகுகளுடன் இருக்கவேண்டுமென்று நினைக்கவில்லை. நாம் எங்கேயாவது போக நினைத்தால் அந்த நினைப்புத்தான் எம்மை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்க்கும். சிறகுகளல்ல. அத்துடன் பூவுலகிலிருக்கும் எல்லாச்சடப்பொருட்களும் எண்ண வடிவங்கள் என்பதால், நாம் அவற்றினூடே செல்லமுடிகிறது.
மற்றொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார், "நான் இன்று உனக்கு இங்கேயிருக்கும் இன்னொரு இடத்தைப்பற்றிச் சொல்லப்போகிறேன். இதை ஒரு தங்குமடமென்று சொல்லலாம். சிலர் இங்கே மிக நீண்ட காலங்கள் தங்கியிருப்பார்கள். ஆத்மீக உலகில் அவர்களின் வளர்ச்சிக்குரிய விழிப்புணர்ச்சியை எதுவாகிலும் உணர்த்தும் வரை. கத்தோலிக்கர்கள் இதனைப் 'பேர்கேட்டறி' (Purgatory) என அழைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது. எல்லோரும் அங்கே சில காலம் தங்கியிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. இந்த இடைப்பட்ட நிலையிலிருக்கும் ஆத்மாக்களுக்காகக் கத்தோலிக்கர்கள் ஆண்டவனைப் பிரார்த்திப்பார்கள். உண்மையில் அங்கே பிரார்த்திப்பது இங்கே எமக்கு நன்மையைச் செய்கிறது. அந்தப் பிரார்த்தனைகளால் உருவாக்கப்படும் அன்பு உணர்வலைகளை எங்களால் நிச்சயமாக உணரமுடிகிறது. இறப்பின்பின் வரும் இந்த உடனடி நிலையானது ஆத்மா இரு உலகங்களுக்கிடையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். கிட்டத்தட்டத் திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலையென்று சொல்லலாம். இது கெட்ட ஆத்மாக்களுக்கு மட்டுமுரிய நிலையல்ல. கூடுதலாக உலகமாயையில் முழுவதும் ஆழ்ந்து எந்த ஒரு ஆயத்தமும் (ஆத்மீகமாக) இல்லாத ஆத்மாக்களுக்கும், தங்களது மேலுலக வாழ்வைத் தொடர விருப்பமில்லாதவர்களுக்குமான நிலையாகும். அவர்கள் ஒன்றில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விடுவார்கள் அல்லது ஒருவிதமான இயக்கமுமில்லாமல் திரிவார்கள். அவர்கள் முன்னேறுவதற்கு ஒருவிதமான முயற்சியுமெடுக்க மாட்டார்கள். ஒன்றையும் அறிவதற்கு முயலமாட்டார்கள். அவர்கள் தங்களது உடலை நிரந்தரமானது, அழிவில்லாதது என எண்ணியிருந்ததால், அந்த உடலை விட்டுப் பிரிந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முயலாமலிருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பற்றி ஆர்தர் விபரிக்கையில், 'அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இடைப்பட்ட நிலையில் நீண்டநெடு நாட்கள் மகிழ்ச்சியின்றி, மனஉளைச்சலுடன்' திரிந்து கொண்டிருப்பார்கள் எனவும், தங்களது ஆத்மஈடேற்றத்துக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக இருப்பதாக உணரும் வரை அப்படியே இருப்பார்களெனவும் சொன்னார். தாமாக ஏதாவது முயற்சி எடுக்கும் வரை எவரும் எதுவும் செய்யஇயலாது என அப்போது உணருவார்கள். அப்போது தான் உண்மையில் விழிப்புற்றவராவர். அவர்கள் அதை உணர்ந்தவுடன் அவர்களுக்கு உதவுவதற்கு அநேக சந்தோஷமான ஆத்மாக்கள் தயாராக இருக்கும். அவை அவரைத் தடைகளைக் கடக்க உதவி வழிநடத்தும். ஆர்தர் மேலும் தொடர்கையில், "சாதாரணமாக ஆத்மா உலகிற்குப் புதிதாக வரும் ஆத்மாக்களை முதலில் அவர்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கூடப்படித்தவர்கள் போன்றோர் வரவேற்பார்கள். இதனால், அந்த நேரத்தில் தங்களது நைந்துபோன உடல் நழுவிப்போக மீண்டும் யௌவனப்பருவமடைவதனால் உண்டாகும் மனஅழுத்தத்தை ஒருதரத்திலேயே உணரக்கூடியதாக உள்ளது. நாம் எந்தவயதில் இறப்பைத் தழுவியிருப்பினும் இங்கே நாம் இளமையாகவே இருப்போம். குழந்தைகளும் கூடப் பொறுப்பான வழிநடத்தலின் காரணமாகக் கூடிய விரைவில் வளர்ச்சியடைந்து விடுவார்கள். ஏனென்றால் ஆத்மாக்கள் எல்லாமே படைப்பின் ஆதியிலே தோன்றியவையே. எனவே இங்கே வயதான ஆசிரியர்களோ, கெடுபிடியான பெற்றோர்களோ இருந்து மற்றைய ஆத்மாக்கைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். இங்கே நீ நம்புகிறாயோ இல்லையோ ஒரு சந்தோஷமான, வரவேற்கத்தக்க சூழ்நிலையே நிலவுகிறது.
"ஆரம்பமுகமன்கள் நிறைவு பெற்றதும் ஆத்மாக்களுக்கு இங்கே எப்படிப் பிரயாணம் செய்வது, எப்படி ஒருவர் மற்றையவருடன் கதைப்பது (தொடர்பு கொள்வது) அது சம்பந்தமான வழிமுறைகள் என்பன விளங்கப்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மனத்தால் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பார்கள் ஆதலால், பெரிய விளக்கங்கள் தேவையில்லை. பூவுலகில் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையானதோ அதை விடவும் இங்கே இம்முறைகள் இயற்கையானது. பூவுலகவாசிகளுக்குச் சுவாசிக்கச் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அதேபோலத்தான் இங்கேயுள்ளவர்களுக்கு (ஒருவர் மற்றையவருடன் எண்ணங்களின் மூலம் தொடர்பு கொள்வதும், நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் இருப்போமென்பதும்).
ஆத்மாக்கள் தமது நிலையை உணர்ந்து, சந்தேகங்களைக் கேட்க வெளிக்கிடுகையில் தனது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களும் (முக்கியமாகக் கடைசியாக முடிந்த பிறவியின் ஞாபகங்கள்) வரத்தொடங்கும். தான் இப்போ முடித்து வந்த பிறவியில் நிறைவேற்ற என எடுத்துக் கொண்டவற்றில் ஏன் சிலவற்றைச் சரிவர முடிக்க முடியாமற் போனோமென வியப்பார். எந்தெந்த இடத்திற் பிழைகள் விட்டோமென எண்ணிப்பார்ப்பார். பிறவியெடுக்கும் போது என்னென்ன நிறைவேற்ற வேண்டுமென்று பிறவி எடுத்தோமோ அது தனது ஆழ்மனதுக்குத் தெரிந்தேயிருக்க ஏன் தனது வெளிமனதுக்கு மட்டும் மறந்து போனது என வியப்பார்.
"இப்போ தெருவில் காரடிபட்டு இறந்த ஒரு குழந்தையின் ஆத்மாவைப் பற்றிப் பார்ப்போம். அந்தக் குழந்தை இந்தப் பிறவியில் ஒரு பாவமும் அறியாதது. எனவே ஏன் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு அப்படி நடந்ததென்று ஒருவருக்கும் விளங்காது. ஆனால் கொஞ்சம் பொறு! அந்தக் குழந்தையின் ஆத்மாவும், அதன் பெற்றோரினதோ அல்லது தாத்தா, பாட்டியினதோ ஆத்மாக்களைப்போல ஒரே வயதுடையதாக இருக்கும். அதுவும் தனது முன்னைய பிறவிகளில் செய்த தவறுகளால் ஆத்மாவைக் களங்கப்படுத்தியிருக்கும். அந்தக் கடனை அது அடைக்க வேண்டாமா? தற்செயலான நடவடிக்கையென்பது ஒன்றுமில்லை. ஏனென்றால் இங்கே போடப்படும் திட்டமானது என்றும் எல்லாவற்றையுமே சரியாக நடைபெறச் செய்யும். ஆனால் படுபயங்கரமான கெட்டதன்மையானது கெட்டமனிதனின் மனதில் வெகு சீக்கிரமாக வளர்ந்து, சில விடயங்களை அங்கே நிறைவேற்ற என்று, ஆரம்பத்திலே இங்கிருந்து போடப்பட்ட திட்டத்தை மீறச்செய்கிறது. ஹிட்லரின் விடயத்தைப் பார்த்தோமென்றால் பிறக்கும் போது தான் ஒரு ஓவியனாய்த் தனது ஆத்மாவின் கலையார்வத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திட்டமிட்டுப் பிறந்தாலும் ஜெர்மன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதும், காலகாலமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மாவின் மனதிலே சேமிக்கப்பட்டிருந்த கெட்டதன்மைகள் அனைத்தும் விஸ்வரூபமெடுத்து அவனை ஒரு அரக்கனாக மாற்றி விட்டது."
வேறொரு முறை ஆர்தர், இறப்பின் பின் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டவர்கள், தாங்கள் தங்களது பூதவுடலை நீத்து ஆத்மா உலகுக்குப் பயணமாவதை முழு உணர்வோடு செய்பவர்களுக்கு என்ன நடக்குமென்பதைப் பற்றி விளக்கினார். அவர்கள் தங்கள் பூதவுடலை விட்டு விட்டதையும் தங்களது உறவினர்கள் தங்களைப் பார்க்க இயலாதென்பதையும் உணர்ந்து கொள்வார்கள். தங்களது மரணச்சடங்குகளைப் பார்க்கப் போவார்கள் (இறுதியாகத் தங்களது உடலுக்கு வணக்கம் செய்ய). அதன்பின்னர் உறவினர்களால் தீவிரமாகத் தேடப்படாவிட்டால், பாசவலைகளால் பின்னியிழுக்கப்படாமல் சுதந்திரமாகத் தங்களது மேலுலகப் பணிகளைச் செய்யமுனைவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இங்கே உண்மையாக முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் தங்களை எண்ணங்களாலும் கருத்துகளாலும் உடுத்திக்கொள்வார்கள். முன்னேற்றப்பாதையில் போவதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் நிச்சயமாக முன்னேற்றப்பாதையில் சென்று இறைவனுடன் இரண்டறக்கலப்பார்கள். தொடக்கத்தில் அவர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள். அங்கே ஆசிரியர்கள் சில சமயங்களில் ஆத்மாக்களின் காலடியிலும், சில சமயங்களில் அவர்களுக்கு மேலே மிதந்தும் பாடங்களை நடத்துவார்கள். ஆனால் அவர்களும் பூவுலகில் ஆத்மாக்களுக்கறிந்த சடப்பொருட்கள் போலவே உண்மையான ரூபத்துடன் இருப்பார்கள்.
"அந்த ஆசிரியர்கள் அடிப்படையறிவுகளையும், கீழைத்தேயநாடுகளின் தத்துவங்களையும், மற்றும் புதிய சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவற்றையும் பற்றி விளங்கப்படுத்துவார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்தபின் அவர்கள் சிறப்புக்கல்வி (யேசுபிரான் பூவுலகில் பிறக்கும் போது அறிந்திருந்த மாதிரியான) கற்பிக்கப்படுவார்கள். அவர்கள் இறைவன் சந்நிதானத்தில் உழைக்கமட்டும் செய்யவில்லை பேரானந்தத்தையடையும் பாதையில் ஸ்திரமாகக்கால்களைப் பதித்துச் செல்வார்கள். அவர்கள் உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களென அறியப்படுவார்கள். அவர்கள் இவ்வுலகில் கண்விழிக்கையில் தங்களது கடந்து போன பிறவிகளின் தன்மைகளையும் இனி எடுக்கப்போகும் பிறவிகளின் தன்மைகளையும் முழுவதுமாக உணர்ந்தேயிருப்பார்கள். இவர்கள் கூர்மையான நினைவுத்திறனுள்ளவர்கள். அவர்கள் பிறவிகளின் இடையே இங்கே அறியப்படுகின்ற ஆத்மீக அறிவுகளைப் பூவுலக வாழ்க்கையின் போது பறிகொடுக்காமல் காப்பாற்றுவார்கள். உதாரணத்துக்கு நாம் இங்கே முன்னேறுவதற்குரிய சிறந்த வழியானது அன்பு செலுத்துவதாகும் என்று அறிவோம். வேறொரு ஆத்மாவுக்குத் தீங்கு நினைத்தால் அந்த நினைப்பே இங்கு எமது முன்னேற்றத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். அந்த நினைப்பே (அந்த நினைப்பால் எழுந்த கறையைப் போக்குவதற்குச்) சில சமயம் எமக்குப் பல பிறவிகளெடுக்க வழிகோலும். தீயனவற்றை உரைக்காதே. தீயனவற்றை நினைக்காதே. நாம் உண்டாக்குவதைத் தவிர வேறு பாவங்களில்லை. ஏனென்றால் இங்கே சாத்தான் இருப்பதற்கான ஒரு அடையாளமும் இல்லை. எமது எண்ணங்களாலும் நடவடிக்கைகளாலும் நாம் தான் சாத்தானை உருவாக்குகிறோம்.
நான் 'சாத்தான்' என்ற கருத்தை விளக்குமாறு கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார். "மனிதகுலத்தால் ஆரம்பத்திலேயே அறியப்பட்டதும், ஆனால் உலகாதய ஆசாபாசங்களால் மறக்கடிக்கப்பட்டதுமான காலகாலமாக இருந்து கொண்டிருக்கும் ஞானமானது எமக்கு இங்கே கற்பிக்கப்படும். நாம் ஆசாபாசங்கள், வெறுப்புகள், காமம் போன்றவற்றை விலத்துவதன் மூலம் பௌதீகவுலகின் தங்குதடைகளை உயிரோடிருக்கையிலேயே வெற்றிகொள்ளலாம் என்பதை நாம் அறிவோம். உலகாதய மாயையில் நாம் ஆழ்ந்து போவதற்குக் காரணம் நம் உள்ளத்தே தூண்டுவிக்கப்படும் ஆசை அபிலாஷைகளே. அப்படித் தூண்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசை அபிலாஷைகளை வெற்றிகொள்வதே உயர்நிலையை எய்துவதற்குரிய விரைவான வழியாகும். முடியற்ற வாழ்வின் ஒரு மின்னலான கணமே இந்தப் பூவுலக வாழ்வென்பதைப் புரிந்துகொண்டால் இந்த ஆசாபாசங்களை வெற்றி கொள்வது இலகுவாகும். அந்த மின்னலான கணப்பொழுதில் (பூவுலகில்) தூண்டுவிக்கப்படும் ஆசைகளுக்காக ஏன் ஒருவரின் முன்னேற்றங்களைத் தடுக்க வேண்டும்? இந்தச் சிந்தனையை என்றும் மனதில் வைத்திருக்க வேண்டும். மனிதனைச் சூழ்ந்து நின்று ஆசை வேட்கைகளால் அவனைத் தன்னைப் படைத்தவனையே மறக்கடிக்கச் செய்யும் இந்தத் தீய சக்திகளை வெல்வது மிக மிக முக்கியமானது.
"இந்தத் தீயசக்திகளானவை சில சமயம் பரப்புபவர்களால் சொல்லப்படுவது போல சைத்தானின் வேலையல்ல. ஆனால் கெட்ட எண்ணங்களைச் சிலர் எண்ணுவதால் சூழலில் நிலையாக ஏற்படுத்தப்படும் தீயஅலைகளாகும். நிலையான கறைகளாகும். 'நிலையான' என்று சொல்வது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பலர் நல்ல எண்ணங்களை எண்ணுவதால் உண்டாக்கப்படும் நல்ல அலைகள் இந்தத் தீய அலைகளின் சக்திகளை நிர்மூலமாக்கும். சைத்தான் என்பது நாம் நினைப்பது போல இல்லை. மனிதனானவன் இப்பூவுலகில் கால் வைத்ததில் இருந்து சேர்க்கப்பட்டிருக்கும் தீயசக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததே இந்தச் சைத்தான் ஆகும். அது தீய்மைகளின் விளைவேயாகும். மனிதனால் கர்த்தர் போல இருக்க இயலாததால், ஒவ்வொரு சமுதாயமும் அதனது தீயசெயல்களால் இந்தத் தீயசக்திக்கு உரம் போட்டு அதன்மூலம் உருவான அந்தத் தீயசக்தியே நாம் சைத்தானென நினைப்பதாகும். எவ்வாறு ஒவ்வொரு கருணையான, நன்மையான செயல்களாலும் நல்ல சக்தியானது பிரகாசிக்கிறதோ, அவ்வாறே இந்தத் தீயசக்தி ஒவ்வொரு தீயசெய்கைகளாலும் உரமூட்டப்பட்டு மிகச்சக்திவாய்ந்த விசையாக உள்ளது. அதுதான் சைத்தான். அது ஒரு ஆளல்ல. ஆரம்பத்தில் ஒரு சொல்லிருந்தது. அது நல்ல சொல்லாக இருந்தது. அது 'கடவுள்' என்னும் சொல்லாகும். ஆத்மாக்களுக்காக இவ்வுலகினைப் படைத்த தந்தையானவன் தீயசக்திகளைக் கலக்கவில்லை. ஆனால் வழிதவறிய ஆத்மாக்கள் பௌதீக உடலெடுத்துத் தங்களது சொந்த முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காகப் பேராசைப்பட்டுச் சண்டைசச்சரவுகளிலீடுபட்டு அதனால் உருவாக்கப்பட்ட தீயசக்திகளின் மொத்த உருவை அவர்கள் சைத்தானென அழைத்தார்கள். சைத்தானைக் கடவுள் படைக்கவில்லை. மனிதன் தான் படைத்தான். அது ஒரு கெட்ட ஆத்மாவல்ல. ஆனால் மனிதனின் கீழ்த்தரமான குணங்களினால் உண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. அதற்கு எமது கீழான எண்ணங்களினாலும், செயல்களினாலும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறோம். எண்ணங்களும் செயல்களேயாகும் என்பதனை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு கெட்ட சிந்தனையும், செயலும் அன்பான, கருணையான சிந்தனையாலும், செயலாலும் இடமாற்றப்பட்டால் சைத்தானின் வடிவம் சிறுத்துக்கொண்டே வரும். சைத்தானை அழிக்க வேண்டுமென்றால் நாம் இதனை உணரவேண்டும். எனவே நாம் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டாயிரமாம் ஆண்டை அண்மிக்கையில், பூவுலகில் வாழும் அனைவரது இதயங்களிலும் கெட்ட எண்ணங்களுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களே நிரம்பியிருக்கும். பூவுலகில் மட்டுமல்ல நாம் இப்போ செய்வது போல ஆத்ம உலகிலும் நல்லனவே நிரம்பியிருக்கும்."
விலங்குகளுக்கும்கூட இறப்பில்லையா என அறியவிரும்பினேன். அதற்கு ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இங்கே நேரம் என்பதற்கு அர்த்தமில்லை. எங்களுக்கு வயதில்லை. நாம் ஆரம்பத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கிறோம். எமக்கு முடிவில்லை. நாம் இங்கே இருப்பதே நேரம் என்பதனை விளக்கப்போதுமானது. இந்த உண்மையைச் சரிவர விளங்கிக்கொள்வோமெனில் ஏன் வீணான விஷயமென்று ஒன்றுமில்லையெனப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்றுமே இறப்பதில்லை. மீண்டும் அதனை அழுத்திச் சொல்கிறேன். ஒன்றுமே இறப்பதில்லை. இறப்பு என்று ஒன்றுமே இல்லை. படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இருந்துகொண்டே இருக்கின்றன. எவையும் அழிவதில்லை. ஆனால் அவைகளின் நிலைகள் மாறுதலடையும். ஒரு கூண்டுப்புழு வண்ணாத்துப்பூச்சியாய் மாறி அதனது ஆத்மா வேறொரு வடிவமெடுத்தவுடன் அதனுடல் மீண்டும் அதனது மூலப்பொருள்களுக்கு மாறும். ஆத்மா என்றும் மாறாது. அநாதியானது. ஆனால் அதன் நிலைகள் மாறுதலடையும். பௌதீக உலகில் எமது கையாலடிபடும் ஈயானது வேறொரு உலகில் நிலை மாற்றமடையும். ஆனால் ஈயான அதனது தன்மையானது மாறாது.காரிலடிபட்டு இறக்கும் நாயின் நிலையும் இதேதான். அதனது பூதவுடல் பூமிக்குச் சென்றடையும். அதனது ஆத்மா ஏனைய ஆத்மாக்களைப்போலவே அழிவில்லாததாகையால் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும். இது ஒரு மாறாத நியதியாகும். நாம் ஆரம்பத்தில் இருந்தது போலவே என்றும் இருப்போம். ஆனால் ஆத்மீக வழிகளில் முன்னேறிக்கொண்டு இருப்போம்.
மேலும் வளரும்.................
ஆர்தர் போர்டின் உடலம் தீமூட்டப்பட்டது. அவரது கடைசி ஆசையாக அவரது சாம்பல் மியாமிக்கருகே அத்திலாந்திக் சமுத்திரத்தில் தூவப்பட்டது. ஒரு மாதம் முடிவடைவதற்குள் அவர் தன்னுடைய தொடரும் வாழ்க்கையின் இன்னொரு புதிய வடிவத்தைப் பற்றிப் பின்வருமாறு விளக்கத்தொடங்கினார்: "எனது பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடி, ப்ளட்சருடனும் பல நாட்கள் உரையாடி மகிழ்ந்ததன் பின் நானறிய வேண்டிய முக்கியமான ஒரு விடயத்தைத் தேடத்தொடங்கினேன். அது தான் ஞானாலயமென்பது. போன பிறவிகளினிடையில் அறிந்ததும், எனக்குக் கலைவந்தபோது உணர்ந்ததும் கொஞ்சம் நினைவிலுள்ளது."
"நான் அதிக நேரம் தேடவேண்டிய தேவையிருக்கவில்லை. ஒருவரிடமிருந்தும் வழியறியவேண்டிய தேவையில்லாமல் நானங்கு நின்றேன். எனது நினைவிலிருந்ததைப் போலவே அது ஒரு மலைச்சரிவுக்கப்பால் மறைவாயிருந்த குன்றிலிருந்து வரும் அருவிக்கருகிலிருந்தது. அது நவீனமாக இல்லை, ஆனால் அந்த இடத்திற்கு மிகவும் பொருந்தியிருந்தது. அது வாழ்க்கையெனும் நீரோடையின் ஒரு பகுதி போன்றிருந்தது. ஆசிரியர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். அதனுடைய அதிசயங்களையும், நினைவுகளின் அழகுகளையும் நான் மறக்கவில்லை என்பதையறிந்து மகிழ்ச்சியுற்றார்கள். வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நான் எனக்குரிய இடத்தில் இருந்தவுடன் அவர்களில் வயது முதிர்ந்தவர் என்னைப்பார்த்து, 'ஆர்தர் நீர் ரொம்ப நேரம் விலகியிருக்கவில்லை' என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பூவுலக வாழ்க்கையை வாழ்ந்தது எனக்கு நீண்ட பயணமாகவிருந்தது. ஆனால் இங்கே அது கண்மூடிமுழிப்பதற்குள் நடந்தது போலுள்ளது. முக்கால்வாசி நூற்றாண்டுகளுக்கு முன் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்தோம். காலம் மாறாமல் அப்படியே நின்றது போலிருந்தது."
"தியானத்தைப் பற்றிய உரையாடலுடன் ஆசிரியரானவர் பாடத்தை ஆரம்பித்தார். தியானமானது பூவுலகிலும், இங்கேயும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எனக்கு நினைவுபடுத்தினார். தியானம் என்பது கடவுளின் இருதயத்துடன் எம்மைத் தொடர்புபடுத்தும் இனிமையான பாதையாகும். அதனால் தான் பௌதீக உலகிலிருக்கும் போதே தியானம் செய்வது மிக, மிக முக்கியமானதாகும். ஏனென்றால் பௌதீக உலகிலறிவது இங்கிருக்கும் சாராம்சத்தைத்தான். தியானம் செய்துகொண்டிருந்தால் ஒரு தொடர்ச்சியிருக்கும். பிறந்த குழந்தையே அங்கு தொடர்ந்து தியானம் செய்து படைத்தவனுடனான ஒருமையை உணர்ந்து கொண்டிருக்கும்."
"ரூத், உண்மையாகக் காலைவேளைகளில் உன்னுடன் நான் நடத்தும் இந்த உரையாடலுக்கு என்னுடைய இந்த ஞானாலயத்திலிருக்கும் பழைய ஆத்மாக்கள் ஒரு கணமேனும் தாமதிக்காமல் அனுமதி தந்துவிட்டனர். அவர்களும் என்னைப்போலவே இந்தச் செய்தி பரப்பப்படவேண்டும் அதனால் எல்லோரும் பயன்பெறவேண்டும் என்று ஆர்வத்தோடு உள்ளார்கள். இந்தப் புத்தக வேலை முடியும்வரை என்னை இந்தக் காலைவேளைகளிலான உரையாடலை நிகழ்த்தச் சொன்னார்கள். இது தற்காலிகமான வேலை நேரம் தான். இந்த வேலை முடிந்ததும் வேறு வேலைகளுக்குப் போய்விடுவேன். அதாவது இங்கு வரும் ஒரே மாதிரியான மனநிலைமையைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு குருவாக நான் வருவதற்கேற்ற வகையில் என்னைத் தயார் செய்வதற்கேற்ற விதமான வேலைகளைச் செய்வேன். நான் 'அங்கு' இருக்கையில் தர்மஸ்தாபனத்திற்கு உண்மையாக இருந்தமைக்கும், மற்றும் தினமும் தவறாமல் தியானம் செய்தமைக்கும், அத்துடன் எனது பேருரைகள் கலந்துரையாடல்கள் மூலமாகத் தியானத்தின் முக்கியத்துவத்தை உலகமெல்லாம் பரப்பியமைக்குமான பரிசளிப்புத்தான் இந்தப் பதவியுயர்வு. இல்லையென்றால் நான் மீண்டும் கீழ்மட்டத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இங்கு நேரத்தை அறியும் வழிமுறைகளில்லாததால் எவ்வளவு காலம் பிடிக்குமென்று யாரால் சொல்லமுடியும்?
"இந்த ஞானாலயத்தைப் பற்றி உனக்கு மேலும் சொல்லவிரும்புகிறேன். காலகாலமாக இந்த ஞானாலயமானது இப்படியே இருந்து வருகிறது. பழங்காலக் கிரேக்க ராஜ்யமான ஏதென்சு நகரத்திலும், அதேபோலத் தேப்ஸ் என்ற பழங்கால ராஜ்யத்திலும் கிட்டத்தட்ட இதேபோன்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இங்கேயிருக்கும் புனிதமான எண்ணவடிவிலான ஞானாலயத்தைப் போலவே பூவுலகில் உருவாக்கவேண்டுமென்று சில பழைய ஆத்மாக்கள் ஞானாலயத்தைப் பற்றிய போதிய அளவு ஞாபகத்தினைக் கொண்டு பூவுலகில் பிறந்து உருவாக்கப் பட்டதே அவைகளாகும். இங்கு வழங்கப்படும் அறிவுரைகள் மனத்தாலேயே வழங்கப்படும். ஆனால் தெய்வீகமானது இங்கு வழங்கப்படும் கல்வியின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஊடுருவியிருப்பதனால், ஒவ்வொரு நாளும் ஒருவரது வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றிய மிகவும் இனிமையான சமயச் சொற்பொழிவு போலிருக்கும். எங்களைக் கடவுளின் மகிமைகளாலும், அண்டசராசரங்களின் வியப்புகளாலும் நிறைப்பதால் எமக்கேற்படும் ஆத்மஎழுச்சியானது சொல்லிலடங்காது.
"மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த ஒரு மலைச்சரிவைக் கற்பனை பண்ணிக்கொள். மரங்களின் இலைகளினிடையே சூரியக்கதிர்கள் புகுந்து வந்து விழ மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அழகான சித்திரவேலைப்பாடாய்த் தெரியும் அந்த வனத்திலுள்ள சிறிய ஒரு வெளியில்தான் எமது ஞானலயமுள்ளது. ஒதுக்குப்புறமாக, அமைதியாகக் கடவுளின் போர்வைகளான வெயிலாலும், நிழல்களாலும் சூழப்பட்டுள்ளது. நாங்கள் எங்களின் தூய எண்ணங்களின் ஊடாக எமது கல்வியைத் தொடங்கும் போது பறவைகளின் இன்னிசை நிற்பாட்டப்பட்டிருக்கும், ஆனால் தியானம் செய்கையில் அவைகள் சொர்க்கலோக கீதங்களைத் தங்களது கூக்குரல்களால் எழுப்பும். அது இந்த அகிலமெல்லாம் நிலவும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சூழ்ந்து நிற்பதைப் போன்றிருக்கும். ரூத், அந்த ஒலி ஒரு உணர்ச்சியைத் தூண்டும் ஒலி. அது எனது ஆத்மாவின் அடி ஆழத்தில் ரீங்கரிக்கிறது. அதனுடன் அது ஒவ்வொரு உயிரினத்துடனும் என்னை இணைப்பதைப் போன்றிருக்கிறது. இந்த அதிசயங்களை எல்லாம் விளங்க வைப்பது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவ்வுலகிலிருக்கையிலேயே தெரிந்தவைக்கும் இவைக்கும் பெரிதாக வித்தியாசமில்லை. இங்கிருக்கும் ஒளியானது தூய்மையானதுடன் தொடர்ச்சியானதும் கூட, ஏனென்றால் இந்த ஒளியானது சூரியனிலிருந்து வருவதல்ல. மலைகளெல்லாம் தாங்களாகவே ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரங்களும் இச்சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டன போலும். அவை தங்கள் பாஷையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப்போலுள்ளன. ஊர்வனவற்றின் மற்றும் பறப்பனவற்றின் பாடல்கள் இனிமையானவை. அத்துடன் இந்த அகிலத்தின் வேகத்தினால் உருவாகும் அதிர்வலைகளானது ஒன்றோடொன்று மிகவும் பின்னிப்பிணைந்திருப்பதால் பூவுலகிலிருக்கும் ஒருவருக்கு இவையெல்லாம் விளங்காது.
ஞானாலயத்தின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்போம். இங்கே ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கேற்றபடி தங்களுக்குப் பொருத்தமான நிலையில் ஆத்மீக முன்னேற்றமடைந்தவர்களுடன் கூட்டுச்சேர்வார்கள். அங்கே பூவுலகில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் ஒன்றுகூடி ஓரிருமணத்தியாலங்கள் கடவுளின் புகழைப்பாடிப் பின் பணத்தட்டை அனுப்புவதைப்போல அல்ல இங்கே. இங்கே அங்கு நடைபெறுவதுபோல தனிய ஒரேயொரு பூசையல்ல. இங்கே ஞானக்கோப்பையிலிருந்து ஒவ்வொருவரும் தனது தேவைகட்கேற்ப எடுத்துக் கொள்வார்கள். ஞானக்கோப்பையைத் திருப்பி நிரப்பவேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அந்தந்த நேரங்களில் ஆத்மாக்களின் தாகங்களுக்கேற்ப ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கும். நாங்கள் எங்களது ஆத்மீகத் தேவைகளைச் சரியாகக் கண்டுகொண்டோமென்றால் ஞானக்கோப்பையிலிருந்து ஞானத்தை விரைவாக அருந்தலாம். சிறிது சிறிதாக எமது ஆத்மீகத் தகைமைகளுக்கேற்ப நாம் எமது முன்னேற்றத்தைத் திட்டமிட நாம் இந்த ஞானப்பங்களிப்பில் பங்கெடுத்து அதனாலேயே எமது ஆத்மாவைச் சுத்திகரிப்போம். ஏனென்றால் எம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தப் பேரலையாக இறைவன் இந்த ஞானாலயத்துக்கு வெகு அருகிலிருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் லிலி என்ற ஆத்மா என் மூலமாக எழுதுகையில் நடந்தது போலவே 'ஆர்தரும்' என் மூலமாக எழுதுவதை என்னால் பல நாட்களின் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக மீளப் பார்க்கும்வரை நினைவுக்குக் கொண்டுவர இயலாதிருந்தது. ஆனால் ஆர்தரின் நினைவுச்சக்தி கூர்மையாய் இருந்தது. மறுநாட்காலை அவர் பின்வருமாறு தொடங்கினார். "ரூத் நான் நேற்று உனக்குச் சொன்ன ஞானாலயமானது எல்லோராலும் வரமுடியாதது. பூவுலகிலிருக்கையில் ஆத்மீக முன்னேற்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றுத், தியானமிருந்து, உலகை இயக்கும் மஹாசக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டும் தான். இங்கு வரக்கூடிய தகைமையைப் பெற்ற நாமெல்லோரும் உண்மையிலேயே பாக்கியசாலிகள் ஏனென்றால் உலகப்பந்தங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் இங்கே வெகுவிரைவாக முன்னேற முடியும். இதனை வாசிப்பவர்கள் இதனது முக்கியத்துவத்தை உணர்வார்களென நான் நினைக்கிறேன். பூவுலகில் ஆத்மீக முன்னேற்றமடைந்தவர்கள் இங்கே விரைவில் முன்னேறலாம். மிகச்சில பிறவிகளே போதும்.
பூவுலகில் இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதன்மூலம் ஆத்மா நிரந்தரமானது அதற்கு அழிவில்லை என்பதை நிரூபிப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகளைத் தமக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் சிலர் நம்பாமல் பகிடி பண்ணிச் சிரித்தார்கள். நாம் அதனையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். எமது நம்பிக்கைக்கு உண்மையாயிருந்தோம். இப்படி நம்பாமல் இருக்கும் நிலையும் எமது மிகநீண்ட முன்னேற்றப் பாதையில் ஒரு படியே என்பதை நாம் அறிவோம். அப்படிப் பகிடி பண்ணுபவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். ஏனென்றால் ஆத்மா நிரந்தரமானதும், என்றும் இருந்துகொண்டேயிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்குத் தங்கள் மனதை விரியவிடாமல் வைத்திருக்கிறார்கள்."
ஒருநாட்காலை சரியான தடிமன், தொண்டை நோ இருந்ததால் நான் வழக்கமான நேரத்துக்கு டைப்ரைட்டருக்கு முன்னால் போய் உட்காரவில்லை. இரு மணித்தியாலங்களின் பின்தான் ஓரளவு உடல்நிலை சரியாகப் போய் உட்கார்ந்தேன். வழக்கமாக 'லிலி' தான் டைப்ரைட்டரில் உரையாடலைத் தொடங்குபவர். அன்று ஆர்தர் தான் தொடங்கினார். "ரூத், நான் ஆர்ட். மற்றையவர்கள் போய்விட்டார்கள். ஆனால் உனக்கு உடல்நிலை சரியில்லாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு உன்னால் வரமுடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் அங்கிருக்கையில் அப்படி நடந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் முக்கியமான விடயங்களை மறந்துவிடுவேன். லிலி இங்கே நீண்ட காலமிருப்பதால் உடலின் தன்மைகளை மறந்துவிட்டார். ஆனால் நான் நீ ரெடியாகும் வரை காத்திருந்தேன்.
"இன்று நானுனக்கு இவ்வளவு காலமும் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப்போகிறேன். இங்குள்ளவர்கள் ஒருவரையொருவர் பற்பல பிறவிகளில் சந்தித்திருப்பார்கள். உலகின் உயிரினங்களின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் சிலர் ஒன்றாயிருந்திருப்பார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் பூவுலகிலோ அல்லது மேலுலகிலோ எந்த இருவரின் பாதைகளும் நிச்சயம் சந்தித்திருக்கும். அதன் காரணமாக எந்த ஒருவரும் மற்றையவருக்குப் புதியவரல்ல. நாமெல்லோரும் ஒருவரின் பகுதியே மற்றையவரென்பதையும் நாமெல்லோரும் கடவுளின் ஒரு பகுதியே என்பதையும் இதனால் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம். எல்லா ஆத்மாக்களும் கடவுளின் உருவாக்கங்களே. அதேபோலவே மரங்களும், பூக்களும், அருவிகளுமாகும். ஆனால் அவர் எம்முள் தனது ஆத்மாவை சுவாசித்ததால், அவர் தனது வடிவில் எம்மையுருவாக்கியதால் நாம் சிந்திக்ககூடிய வல்லமையையும், அதனால் சரி, பிழையையறியக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளோம்.
"சரி, பிழை என்பது வெவ்வேறு இன மக்களுக்கு வெவ்வேறு விதமாக வேறுபடும். ஆனால் இன்னொரு உயிரை வருத்துவதென்பது தன்னையும் கடவுளையும் வருத்துவதற்குச் சமமாகுமென்பது வெளிப்படை. அது பிரதான குற்றமாகும். மற்றையவர்களுக்கு உதவினோமென்றால், அது பிழையான வழிகளில் என்றாலும் நாம் பொதுவான இலட்சியமான கடவுளுக்கு உதவுவது என்ற வழியை நோக்கிப் போகிறோம். அந்தப் பிழையான வழிகள் சில சமயங்களில் சட்டத்துக்கு முரண்படலாம். உதாரணமாக அமெரிக்காவில் சில சமயம் நாம் சட்டத்தை மீறிச்செயற்பட்டாலும் கடவுளின் வழிகளுக்கு அது எதிராக இருக்கவேண்டிய அவசியமில்லை. சட்டங்களெல்லாம் பொதுவாகப் பெரிய அளவிலான மக்கள் தொகை ஒன்றாக நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டவையே. அடிப்படை பாவமானது இன்னொருவரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ வேண்டுமென்றே வருத்துவதாகும். நல்லதோ, கேட்டதோ எமது எண்ணங்களெல்லாம் செயல்களே. மற்றையவருக்கெதிராக எதுவென்றாலும் நினைத்தோமெனில் அது அவர்களின் தட்டிலிருந்து உணவையெடுத்து உண்பதைப்போல் பாவமானதே.
மறுநாட்காலை லிலியின் அறிமுகத்துடன் ஆர்தர் தொடர்ந்தார். "ஹாய் ரூத், நீ சுகமானதையிட்டு மகிழ்ச்சி. இன்றைய பேச்சுக்கு வருவோம். நான் மறு உலகைப்பற்றி நிரம்பவே வாசித்தறிந்திருந்ததாலும் எனக்குக் கலைவந்த நேரங்களில் மறு உலக அனுபவங்கள் இடையிடையில் வந்ததாலும் முன்பே சொல்லியதுபோல் நான் இங்கு வரும்போது இங்கு எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியுமென்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கும் இங்கே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. உதாரணமாக நாம் முயற்சி எடுத்தால் தான் எவரது அறிவுரையையும் கேட்க முடியும். நாம் எண்ணுவதன் மூலமே எந்த இடத்துக்கும் போய் எவரையும் பார்க்க முடியுமென்பது உண்மைதான். ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன:
ஒருவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால் நீங்கள் அவரை அணுகவோ அவரது நடவடிக்கைகளைப் பார்க்கவோ முடியாது. அது இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். நான் ப்ளச்சருடன் பல மணி நேரங்களுக்கு உரையாட விரும்பலாம். ஆனால் நான் பூவுலகிலிருந்தபோது அவர் என்மூலமாக நடத்திக்கொண்டிருந்த விஷயத்தை விடவும் அவருக்கு வேறும் பல விஷயங்களுள்ளன. எனவே எனது விருப்பங்களை அவரில் திணிக்க இயலாது. அவரும் ஒன்றில் தத்துவ விஷயங்களைப் பற்றி என்னுடன் சம்பாஷிக்க விரும்ப வேண்டும் அல்லது எனக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட விரும்பவேண்டும். உண்மையில் இங்கும் பார்ப்பதற்கு இடங்களிருக்கின்றன.
"நான் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது சொல்லவிரும்பினால், சில நேரத்தில் அவர் அந்த நேரத்தில் அகப்படாமல் போகலாம். இங்கே எந்த நேரத்திலும் பலப்பல வகையான ப்ராஜக்ட் என்று சொல்லப்படுகின்ற திட்டமுறைச் செயற்பாடுகள் நடக்கின்றன. இன்னொரு ஆத்மா எம்மைச் சந்திக்க விரும்பின் நாமும் சில வேளைகளில் அவருக்கு உதவமுடியாமற் போகலாம். நான் சொல்வது உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இதனால் எங்களது தனிமை பாதுகாக்கப் படுகிறது. அங்கேயும் கூட நீங்கள் ஒருவருடன் கதைக்க விரும்பாவிடின் தொலைபேசியைத் தவிர்ப்பதைப் போன்றதே இதுவும்."
"சிலர் இங்கு புதிதாக வரும் ஆத்மாக்களுக்குக் கற்றுத்தருகிறார்கள். சிலர் பூவுலகிலிருக்கும்போது நன்றாகக் கற்று உணராமல் விட்ட தத்துவவியல், முன்னேற்றவியல் போன்ற பாடங்களை நன்றாகப் படிக்கப் போகிறார்கள். சிலர் மும்முரமாக எண்ணக்கருக்களை ஆராய்வதில் ஈடுபடுகிறார்கள் அல்லது முற்பிறவிகளில் நிறைவேற்ற முடியாமல் போனவைகளைச் சரிசெய்யும்முகமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கபுரிக்கு உங்களைப் போலவே நாமும் தூரத்திலேயே உள்ளோம். நாம் தூல சரீரத்தை விடுத்து சூக்கும சரீரத்தை எடுத்துள்ளதால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டோமென நினைப்பது மடத்தனமாகும். இறைவனுடன் இரண்டறக் கலப்பதானது, பல காலத்திற்குக் கடவுளின் வழிமுறைகளுக்கேற்ப நடப்பதற்கான முயற்சிகளுடன் ஏனையவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதினாலும் அடையப்படும். ஏனையோருக்கு நன்றியை எதிர்பார்க்காமல் செய்யும் நல்லகாரியங்களால் கடவுளையடையும் பாதையானது இலகுவாகவும் எளிதாகவும் ஆக்கப்படும்.
எந்தவிதமான நன்றிக்கடனையோ வெகுமதியையோ எதிர்பார்க்காமல் செய்யப்படும் எந்தவொரு விஷயமும் ஆத்மீக முன்னேற்றத்தின் ஏணிப்படிகளே. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதிருப்பது நன்றென்பது நினவிலுள்ளதா? எனவே உலகாதய வெகுமதிகளையோ, நன்றிக்கடன்களையோ எதிர்பார்க்காமல், கொடுப்பனவற்றைப் பிறர் அறியாமற் கொடு. கொடுப்பதிலேயே மகிழ்ச்சியுள்ளது, அதை மற்றையவர்களுக்குச் சொல்வதிலேயல்ல. மனிதர்களிடமிருந்து வெகுமதி கிடைத்தபின் எப்படி நீ கடவுளிடமிருந்து வெகுமதி எதிர்பார்க்கலாம். பூவுலகில் ஏனையோருக்கு உதவுவதால் கிடைக்கும் புகழ்ச்சியும், பெருமையும் வெகுமதிகளே. எங்களுக்கு நாங்கள் உதவுவதற்கு நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோமா? இல்லையே. அப்படியாயின் ஏன் எம்மிலும், கடவுளிலும் ஒரு பகுதியாயிருக்கும் மற்றையோருக்கு உதவும்போது மட்டும் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்?
"ஞானாலயமென்பது ஒரு இடமென்பதல்ல. அது ஒரு மனநிலையே. நிறைவான, இனிமையான எண்ணங்களினாலும் உள்ளுணர்வுகளிலாலுமான ஒரு அறிவறிந்த நிலையே. ஒவ்வொருவரும் அதனை எங்களது கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். எனக்கு அது அழகுகளினாலும், சத்தியங்களினாலும் உருவான ஒரு வடிவமே. எம் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை உணரும் தன்மை உள்ளது. ஞானாலயமானது அந்தப் பேருண்மையின் ஒரு உயர்ந்த வடிவமே. ஆத்மாவை விளங்கிக்கொள்வதற்கும், ஆத்மீக முன்னேற்றத்துக்கும் ஆசைப்படுபவர்கள் இங்கு படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாடுவார்கள். உள்ளூர நாம் முயலாவிடின் நாம் நிரந்தரமான எதையும் சாதிக்க முடியாது.
நாம் சிறந்த மனிதகுலமாகப், பண்பட்ட மனிதராக வரவேண்டுமெனின் இந்த வளர்ச்சிக்கான முயற்சியென்பது தொடரப்படவேண்டும். பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம், மிகச்சக்தி வாய்ந்த இனமாக மனிதஇனம் வருவதற்கான சக்தியும், வலுவும் எமக்கு உள்ளது. அதற்கு என்ன செய்யவேண்டுமென்றால்: ஒரு தனிமனிதனோ, அன்றி ஒரு குறிப்பிட்ட இனமோ சக்திவாய்ந்ததாக வரஇயலாது. முழு மனித இனத்தின் முயற்சியாலேயே இது முடியும். அதனாற்தான் ரூத், ஏனையோர் கஷ்டப்படும் போது உதவிக்கரங்களை நீட்டுவது அவசியமாகிறது. இது ஒரு அதீதமான கற்பனையாளனின் கற்பனையிலெழுந்த (எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற) கனவுலகமல்ல. ஆனால் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியாகும். முன்னொரு காலத்தில் நாம் உயர்ந்த இனத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். நான் இப்போ உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறியும் தருவாயிலிருந்தோம். அந்த அறிவை வைத்து என்ன செய்வதென்றும் அறிந்திருந்தோம். ஆனால் பேராசை, அவா, வெறுப்பு இவைபோன்ற வேறும் பல கீழான உணர்ச்சிகள் மனித குலத்தைப் பௌதீக உலகில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன"
மறுநாட்காலை சற்றுப் பிந்தி எழுந்தேன். அவசர அவசரமாக டைப்ரைட்டருக்குச் செல்ல ஆர்தர் "ரூத், இது ஆட்ர், மற்றவர்கள் போய்விட்டனர். ஆனால் நீ எப்படியும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்." என்றார். பின்னர் சில பகிடிக்கதைகள் விட்டபின் பின்வருமாறு எழுதினார். "ஞானாலயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கே நாம் தத்துவக்களத்தில் உயர்வான மனங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இப்போ இங்கே இருப்பவர்கள், மற்றும் மீண்டும் உலகில் பிறக்கப் போய்விட்டவர்களின் உயர்மனங்கள் - அவர்கள் போய்விட்டாலும் அவர்களின் பதிவுகள் இங்கேயே இருக்கும் (உனது முன்னைய பிறவிகளின் பதிவுகளிருப்பதைப் போல). அண்ட சராசரங்களின் இரகசியங்களிலிருந்து எமக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற நாம் ஞானாலயத்துக்குச் செல்வோம். எப்படிச் சரியான வழிகளில் எண்ணங்களை எண்ணுவது எனவும் எப்படித் தியானம் செய்வது எனவும் படிப்போம். எமது நினைக்கும் கருவியானது எமது ஆத்மாவின் ஒரு பகுதியாகும். அதனால் தான் பூவுலகில் அதனை ஆழ்மனம் என அழைக்கிறார்கள். அது எம்முடன் எப்போதும் இருக்கும். ஆனால் வெளிமனம் எமது பௌதீக உடம்பினால் மட்டும் தான் இயக்கப் படுகிறது.
"உலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து நாம் கிரகிக்கும் எல்லா விடயங்களையும் எமது ஆழ்மனம் பதிந்து வைத்திருக்கும். எமது ஆழ்மனத்தை ஒரு மிகப்பெரிய, படிமங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அலுமாரிக்கு (கபிநெற்) ஒப்பிடலாம். எமக்குத் தெரிந்த எல்லா கபிநெற்றுகளிலும் பார்க்க மிகப்பெரியது இந்தக் கபிநெற். ஆனால் நாம் பௌதீக உடலுடனிருக்கும் போது சாதாரண வழிகளில் எமது ஆழ்மனத்தின் சக்தியை உணருவது கஷ்டம். ஏனென்றால் எமது ஆழ்மனத்திலிருக்கும் அப்படியான அறிவுகள் நினைத்தவுடன் வெளியே கொணரமுடியாத அளவு பெரிய விஷங்கள். கனவுகளின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் அந்த அறிவுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறோம். அதனுடன் ஹிப்னாட்டைஸ் எனப்படும் ஆழ்மன அகழ்வின் போதும் அந்த விடயங்கள் சிலவற்றை மேற்கொணரப் பார்க்கலாம். எந்த வழிகளிலும் எல்லா விடயங்களையும் மேலே கொணர முடியாது. ஆனால் இங்கே ஞானாலயத்தில் எல்லாவற்றையும் அறிய இயலுமாக உள்ளது. அத்துடன் ஆத்மாவின் சில சிறப்பு அம்சங்களை விருத்தி செய்து கொள்வோமாயின் எம் கடந்த பிறப்பு, அதற்கு முந்திய பிறப்புகளை மட்டுமல்ல இந்த உலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாம் எடுத்திருக்கும் ஒவ்வொரு பிறப்புகளையும் நினைவுபடுத்த இயலுமாக இருக்கும்.
"இங்கே ஞானாலயத்தில் சோக்கிரட்டீஸ் இருந்திருக்கிறார். 'கான்ட்' இருந்திருக்கிறார். 'ஜங்' இருந்திருக்கிறார். மேலும் பூவுலகத்தில் மதிப்பளிக்கும் பலர் இங்கே இருந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் வெவ்வேறு தரங்களில் மரியாதைக்குரியவர்களாய் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில உயர்வான உள்ளங்கள் பூவுலகிலிருக்கும் போது கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் எளிமையான நம்பிக்கைகளிலிருந்து வளர்ச்சியடைந்து மிகப்பெரிய அறிஞர்களாக, குருவாக மாறி இங்கே ஞானாலயத்திற்குச் சேவை செய்கிறார்கள். பலருக்கு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் பிறப்பின் அர்த்தத்தைப் பூர்த்தி செய்துவிட்டார்களென்பது மட்டுமல்ல இங்கே மேலுலகத்தில் அவர்களின் பங்களிப்பு தாராளமாக உள்ளதால் அவர்களின் பிறப்பின் அர்த்தம் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் இங்கே சுதந்திரமாக, முன்னேற்றத்தின் பலவிதமான கட்டங்களினூடாக மிக உயர்வான நிலைகள் வரையிலும் பிரயாணம் செய்யலாம். இருந்தும் அவர்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக இருப்பதால், எமது இங்கேயுள்ள 'நாள்' என்று சொல்லப்படுபவதில் சில பகுதியை இங்கே ஞானாலயத்தில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவார்கள்.
"இங்கு வந்ததன் பிற்பாடு பல ஆத்மாக்கள் கற்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஞானாலயத்தில் படிப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் போகவேண்டும். ஏனென்றால் ஞானாயத்தின் கல்வியை அவர்கள் விளங்கிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம். ஞானாலத்தின் கல்வியானது ஆத்மீகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தவர்களுக்குத்தான் விளங்கும். முன்னைய பிறவிகளில் ஆத்மீக முன்னேற்றம் அடையாதவர்களுக்கு இக்கல்வியை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே பல முன்னேற்றத்துக்குரிய பாடசாலைகள் உள்ளன. அவர்கள் அங்கு தத்துவவியலின் அடிப்படை உண்மைகளைமட்டுமல்ல எமது இருக்கையின் நிமித்தங்களையும் அறியமுடியும். நாம் கடவுளின் உருவத்தை மட்டுமல்ல அவரின் தன்மைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே எமது பயணத்தை முடித்துக் கொண்டு கடவுளை அடைவதற்கு நாம் அண்டசராசரங்களின் தத்துவத்தையும் அதன் நியதிகளையும் உணர்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் நாம் கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்திலிருந்து வேறுபட்டு உணரமாட்டோம்.
"கீழ்மட்டப்பாடசாலைகளில் காலத்தை எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது எனக்கற்போம். நாமே காலமாக மாறுவோம். எனவே எமது விஷயத்தைப் பொறுத்தவரையிலாவது எந்த ஒரு விஷயமும் எமது ஒத்துழைப்பில்லாமல் நடைபெறாது. எனவே முயற்சி எடுக்காமல் சோம்பேறிகளாக இருந்தால் நாம் காலம் ஸ்தம்பித்து நிற்பவர்களாக இருந்துவிடுவோம். ஆனால் நாம் முன்னேறி வளர்ச்சியடைய ஆவலுள்ளவர்களாக இருந்தால், எங்களுக்குள் உள்ள காலமானது மாறாத வேகமொன்றில் நாம் அறியவேண்டிய பாடம் முடிந்து அடுத்தது தொடங்கு மட்டும் முன்னேறும். நேரமானது வேறுபடும் தன்மையுடையது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் எந்த இரு ஆத்மாவும் ஒருபோதும் ஒரே விதமான ஆத்மீக முன்னேற்ற நிலைமையில் இருக்காது. அறிவறிந்த பழம்பெரும் ஆத்மாக்கள் எங்களின் அறிவுச்சாரங்களைத் திறந்து எம்மைப் புதிய பாதைகளின் மூலம் செல்லவைப்பதன் மூலம் எமக்குள் இருக்கும் காலத்தை முன்னேபோக வைக்க உதவுகிறார்கள். இந்த மேலுலகமானது வளர்வதற்கும் முன்னேறுவதற்குமான சந்தர்ப்பங்களைக் கொண்ட ஆவலைத் தூண்டக்கூடிய உலகமாகும். கடவுளின் அருளால் பல தளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அறிவுநிறைந்த ஞானாசிரியர்கள் எங்களின் நன்மைகருதி நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எமக்கு உதவுவதற்காக வருகைதரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை சில ஆத்மாக்கள் அநியாயமாக வீணடிப்பது அறியாமையாகும்.
இந்த அகிலத்துடன் ஒன்றிய நிலையிலிருந்து நாம் வேறுபட்டு நிற்பதை நாம் இறப்பு எனும் திரையினூடாக மறு உலகில் அடியெடுத்து வைக்கும் போது நாம் அனைவரும் உடனடியாக உணரச்செய்வோம் என்பதை போர்ட் வலியுறுத்தினார். "முதலில் அதனை உணர்பவர்கள் கூடுதலாக ஒன்றியிருப்பவர்கள். ஏனெனில் அவர்கள் கூடுதலாக ஒன்றியிருப்பதால் சற்றே விலகியிருந்தாலும் வெளிப்படையாகத் தெரியும். இங்கிருக்கையில் சற்றே ஒன்றிய நிலையிலிருந்து கூடுதலாக விலகியிருப்பவர்களுக்குத் தாம் விலகியிருப்பது தெரிவதற்குக் கொஞ்சம் கூடுதலான நேரம் எடுக்கும். ஆனால் கூடிய கெதியில் அதனை உணர்வார்கள். அதன் பின் அவர்கள் தங்களது ஒன்று பட்ட தன்மையைக் கூட்டிக் கொள்வார்கள். இந்த ஆத்மாக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டபின், தங்களை வழிநடத்த ஒரு குருவைத் தேடுவார்கள். தேடுதல் தொடங்கிய அந்தக் கணத்திலேயே குருவானவர் தோன்றுவதற்கு ஆயத்தமாவார். குருவானவர் அழைப்புக்காகவே பார்த்துக்கொண்டிருந்தவர். அபிலாஷையானது எண்ணத்தின் பிதாவாதலினால், எண்ணம் உருவெடுத்த உடனேயே குருவானவர் தோற்றமாவார்.
"மாஸ்டர் அதாவது குருவானவர் தோன்றியபின் ஆர்வமுள்ள மாணவனை இதேபோலவே ஒரே மனநிலையிலிருக்கும் ஏனையவர்கள் ஒன்று கூடியிருக்கும் அறிவகத்துக்கு அழைத்துச் செல்வார். அவர்கள் ஒரு சத்சங்கமாகவே ஒன்றுகூடியிருப்பார்கள். இங்கேயும் சில பின்னடைவுகள் இருந்தாலும் இங்கேயுள்ள சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டலோ அன்றி ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான சில பயிற்சிகளை தொடரா விட்டாலோ, அவர்கள் கொஞ்சம் கஷ்டமான பாதையால்தான் பயணத்தைத் தொடரவேண்டியிருக்கும். இறைவனின் மாபெரும் திட்டத்தின் அடிப்படை உண்மைகள் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. அதாவது, தெய்வீகத்தில் மாறாத நம்பிக்கை கொள்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகளும், இறைவன் வகுத்த நியதிகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் விரிவாக உரைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்னேற்றமடைந்துள்ள ஆத்மாக்கள் ஒன்றைப்பற்றியும் கேள்வி கேட்கமாட்டார்கள் ஏனென்றால் இயற்கையின் நியதிகளை மீறுவதனால் நாம் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்வோம் என்பது தெரிந்ததே.
இயற்கையின் நியதிகள் எங்களின் நன்மைக்கே உள்ளன. பூவுலகில் தங்களின் விருப்பப்படியே எதையும் நடத்தியவர்கள் இங்கே வருகை தந்த புதிதில் இங்குள்ள நியதிகளை மீறத்தலைப்படுவார்கள். ஆனால் அது அவர்களின் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். அவர்கள் பூவுலகிலிருக்கும் போதே சில ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனரெனின் அவர்கள் கடவுளின் வழிகளையறிய முடிவதனால் இங்கு வந்ததன்மேல் அவர்களின் முன்னேற்றம் சீராக இருக்கும். ஆன்மீகப்பயிற்சிகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பது ஆத்மீகமுன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவும். கடவுளின் விருப்பத்தின் படி நடப்பது, மற்றும் உலக நியதிகளுக்கிணங்க நடப்பது. உலக நியதிகள் எல்லோரும் நிம்மதியாக, சந்தோஷமாக உயிர் வாழ்வதற்கே உண்டாக்கப் பட்டிருக்கின்றன. ஆன்மீக ஒழுக்கமானது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பிறக்கும்போதே புகுத்தப்பட்டுத் தொடர்ந்து அதனது வாழ்நாள் பூராவும் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்மீக ஒழுக்கமானது மேலுலகில் மிகமிக முக்கியமான ஒன்று. பூவுலகிலும் பார்க்க இங்கே அதற்கு பெரிய முக்கியத்துவம் உள்ளது.